banner
Feb 20, 2019
292 Views
Comments Off on MGCL – நாம் கல்லூரியில் படிக்கும் இந்த வயதே நாம் நம் வாழ்க்கையில் என்னவாகப் போகிறோம் என்று தீர்மானிக்கிறது.
0 0

MGCL – நாம் கல்லூரியில் படிக்கும் இந்த வயதே நாம் நம் வாழ்க்கையில் என்னவாகப் போகிறோம் என்று தீர்மானிக்கிறது.

Written by
banner

அமைதியின் அமைவிடமான நூலகத்தில், தான் வந்த தடமும் தெரியாமல், இருந்த இடமும் தெரியாமல் வந்து செல்லும் அமைதியான வருகையாளர்களைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் கேட்கையில், அவர்கள் அதிகம் பேர் உதிர்த்த பெயர் சூர்யா.

நம் கல்லூரியில் இயந்திரமின்னணுவியல் (Mechtronics department) மூன்றாமாண்டு படிக்கும் சூர்யாவிடம் பேசியதில், அவர் பல சுவாரஸ்யமான செய்திகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார். மலைகளின் ராணியான உதகைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள கூடலூர் தான் இவருக்கு சொந்த ஊர். இயற்கை எழில் கொஞ்சும் சூழலுக்கிடையே அமைந்திருந்த அவ்வூரின் நூலகத்தின் அமைவிடத்தை கண்டு ஈர்க்கப்பட்டு முதலில் அங்கு சென்ற இவர், பின்னாட்களில் அங்கிருந்த புத்தகங்களை கண்டு அதற்காகவே அங்கு அடிக்கடி சென்றதாய் கூறுகிறார் . புத்தகங்களின் மேல் தனக்கு காதல் வந்ததற்கு, தான் தவறிழைக்கையில் தன்னைத் திருத்திவதற்காக, தன் பெற்றோர் சொன்ன குட்டிக் குட்டிக் கதைகள் தான் காரணம் என்கிறார்.

சுஜாதாவின் பாற்கடல் பற்றிய கட்டுரையை தான் படித்த முதல் கட்டுரையாய் நினைவுகூறும் இவர், இதுவரை எண்ணற்ற புத்தகங்களை படித்துள்ளார். பொன்னியின் செல்வன் நாவல் பற்றி இவர் கூறுகையில் “முதலில் எழுத்தாளர் கல்கியின் மேல் காதல் கொண்டுதான் அந்த நாவலை படிக்கத் தொடங்கினேன். படித்து முடித்தவுடன் குந்தவியிடம் காதலில் விழுந்தேன்” என்கிறார்.

தினமும் 2-3 மணிநேரத்தை நூலகத்தில் கழிக்கும் இவர், நூலகத்தை பற்றி கூறுகையில் “நாம் கல்லூரியில் படிக்கும் இந்த வயதே நாம் நம் வாழ்க்கையில் என்னவாகப் போகிறோம் என்று தீர்மானிக்கிறது. ஆகையால் ஒரு கல்லூரி நூலகம் என்பது ஒருவனுக்கு எல்லாம் தரக்கூடிய இடமாக இருக்க வேண்டும்” என்கிறார். நம் நூலகத்தில் இவருக்கு பிடித்தமான ஒன்று கூறும்படி கேட்கையில், “நம் நூலகத்தில் வேலை பார்க்கும் அண்ணாக்கள் (ஊழியர்கள்) தங்களுடைய அனுபவத்தை என்னிடம் பகிர்ந்துகொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று கூறுகிறார்.”நீ எங்கிருந்தாலும் ஓர் நாள் கண்டிப்பாக உதிப்பாய்” என்று பாதிரியார் ஒருவர் தன்னிடம் சொன்ன வார்த்தைகளையே தனக்குப் பிடித்த வார்த்தைகளாக சொல்லும் இவரிடத்தில் “மேலும் புத்தகங்கள் வழி உங்கள் ஒளிகூட்டி கொள்ளுங்கள்” என்று சொல்லி விடைபெற்றேன். 

Visited 16 times, 1 visit(s) today
banner