மனமெனும் பெருவெளி…!! வார்த்தைகள் அதன் வழி!!
இதற்கேற்ப தன் எண்ணங்களால் தன் வாழ்வின் பாதையை உருவாக்கிக் கொண்டவர் அவர். எங்களுள் ஒருவராய், தன் வாழ்க்கைப் பயணத்தைச் சிறப்பாக எடுத்துக்கூறி தன் பிழைகளைச் சுட்டிக்காட்டி நன்நெறிகளைத் தந்தவர் அவர். ஓர் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், ஒப்பற்ற வழிகாட்டி போன்றவை அவர் நிழல் கொண்ட வண்ணங்கள்.
“நீ நீயாய் இரு, உலகம் உன்னை ஏற்றுக்கொள்ளட்டும்”
பிரபஞ்சத்திலுள்ள யாவும் உன்னுள்ளேயே உள்ளன. தேவையான எல்லாவற்றையும் உன்னிடமே கேட்டுப் பெறு. எதிர்பார்ப்பும், ஒப்பிடும் குணமும் கோபத்தையும், கவலையயும் உண்டாக்கும். எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டால் ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக தெரியாது.ஆகவே, மகிழ்ச்சியான வாழ்விற்கு வித்து இவ்வாறான எண்ணங்களில் இருந்து விலகி இருப்பதே என்று பல எடுத்துக்காட்டுகள் வாயிலாக உணர்த்தியவர்.
“உன் முதல் வெற்றி… உன் பிறப்பே!!”
“எத்தனை வலி, எவ்வளவு போராட்டம் உன் பிறப்பென்னும் வெற்றிக்குப் பின்னால்!! இரண்டாம் முறை வென்றாய் நீ எழுந்து நின்று நடந்த போது” என்று நியதியை அழகாகக் கூறினார்.
“தோல்வி என்பது தவிர்க்க முடியாத ஒரு வெற்றியாகும்”.
தோல்வியுறுவது வியாபாரத்திலும் தொழில்முயற்சியிலும் இயல்பானதாகும். உண்மையில், பல தொழில் முனைவோர் தோல்விகளைக் கொண்டாடினார்கள், ஏனென்றால், நம்முடைய தவறுகள் நமது மிகப்பெரிய ஆதார வழிகளாகும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்று நடைமுறை உண்மைச் சம்பவங்களைக் கூறி எளிதில் புரிந்துகொள்ளச் செய்தவர்.
“உங்களைச் சுற்றியுள்ள சிறிய விஷயங்களை எப்பொழுதும் கவனித்துக் கொள்ளுங்கள், அவைகள் உங்கள் பார்வைக்கு சிறியதாகத் தோன்றினாலும் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை” எனக் குறிப்பிட்டார். இந்தச் சொற்கள் எங்களுக்கு ஊக்கமளித்தது. மேலும் எங்கள் மனதைத் திறக்க எங்களுக்கு பெரிதும் உதவியது.
அடுத்ததாக நாட்டுப் பற்று. இதை அவர் வார்த்தைகளால் அல்ல அவர் வெளிப்பாட்டின் வாயிலாக உணர்ந்தோம். ஆம், அவர் கையில் இருந்த தேசியக் கொடி, தாமரை மலர், புலிச் சின்னம் அதைப் பறைசாற்றியது. மேலும், தேசபக்தி நம் நாட்டை நேசிக்கவும், முழு மனிதகுலத்தையும் தழுவிக்கொள்ள நமக்கு கற்றுக்கொடுக்கிறது. மேலும், எங்கள் உழைப்பால் இந்திய மக்களுக்கு பெருமை அளிப்பதாக உறுதியளித்தோம், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு இந்தியராக பெருமை கொள்ள வேண்டும்.
“என் வெற்றிகரமான மாற்றங்கள் மற்றும் வெற்றிகரமான நடவடிக்கைகளுக்குப் பின்னால் என் மனைவியே உள்ளார்” என்று பெருமிதத்துடன் கூறினார். உங்கள் சரிபாதிக்கு நீங்கள் கடமைப்பட்டிருப்பதோடு உங்களுக்கு முன்னால் அவரை வைத்துக் கொள்வதும்தான் வெற்றிக்கு மிகவும் உற்சாகமான வழி. அவர்கள் வலுவான நிலையில் இருக்கவும், ஆதரவாக இருக்கவும் அவர்களுக்கு வாய்ப்பைத் தர வேண்டும்.
இக்கால உண்மை நிகழ்வுகள் பலவற்றைக் கூறி, அதன் நோக்கம் பற்றியும் அவர் விளக்கினார். இது சமூக வலைதளங்கள் மீதான எங்கள் மேலான பார்வையை மாற்றி ஆழமாய்ச் சிந்திக்க வைத்தது.
இவ்வாறு அவர் வார்த்தைகளை வெளிப்படுத்திய தைரியம் எங்களுக்கு முன்மாதிரியாக இருந்தது. “பெண்கள் எப்போதும் உயர்ந்ததாகவும், வலுவாகவும் உணர வேண்டும்” என்ற அவர் வார்த்தைகள் உணர்ச்சி பொங்க வைத்தது.
எளிதான அவர் அணுகுமுறை கண்டு வியந்தோம். இவ்வாறு எண்ணற்ற உதாரணங்களைக் கூறி எங்கள் இரண்டு மணி நேரத்தின் தூரத்தைக் குறைத்தவர் இவரே, திரு. பிரசாந்த் கணேஷ் அவர்கள். மேலும் எங்கள் பயணப் பாதையில் இவர் காட்டிய வழி எங்கள் இலக்கை நோக்கிக் கொண்டு செல்லும் என உறுதிபடக் கூறுகிறேன்.
“பாழாய்ப்போன பணயத்தில் எல்லாவற்றையும் வைக்கலாம், அனைத்தும் இனி உடைந்து நொறுங்கினாலும் நொறுங்கிவிடலாம் – ஆனால் தலைகுனிந்து நிற்பதென்பது நடக்கவே நடக்காது”
திரு. பிரசாந்த் கணேஷ் உடன்…