தமிழின் தொன்மை அதன் சிறப்புகளுள் தலையாயது . தமிழின் பழமை நம் பெருமை! அதற்கென்றும் புதுமை சேர்த்து தலைமுறைகள் தாண்டி தமிழைத் தழைக்கச் செய்யும் நோக்கத்துடன் , நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம் , குமரகுரு தமிழ் மன்றம் மற்றும் நித்திலம் இணைந்து “தமிழும் தொழில்நுட்பமும்” என்ற இணையவழி உரையாடலை வழங்கின. “தமிழும் இணையமும்- எதிர்கால பார்வை (The vision of Tamil computing for the next five years) என்ற தலைப்பில் , திரு. மணியம் , தலைவர் உத்தமம் அமைப்பு, சிங்கப்பூர் , அவர்கள் உரையாற்றினார் .

தொன்மை வாய்ந்த மொழி என்பதைத் தாண்டி , தமிழ் என்றும் தன்னை நவீனப்படுத்தத் தவறுவதில்லை. தமிழ் விசைப்பலகைகள் , எண்முறை தளங்களில் தமிழின் பயன்பாட்டை மேம்படுத்த உதவும் செயலிகள் , மென்பொருட்கள் என தமிழ் சார்ந்த தொழில்நுட்ப கருவிகளைப் பற்றி இவ்வுரை அமைந்தது. தமிழில் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கும் தொழில்நுட்பம் பற்றி அறிகையில் பங்கேற்பாளர்களிடம் பெரிதும் ஆர்வம் காணப்பட்டது. மேலும் தமிழ் மின்னஞ்சல் முகவரிகள் இன்னும் சில ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என்பது பேருவகை அளித்தது. தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப வளர்ச்சி பற்றியும் , அவற்றின் எதிர்காலம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றியும் அறியும் வண்ணம் அமைந்தது இந்நிகழ்வு.


முப்பது பங்கேற்பாளர்கள் கொண்டு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது, இந்நிகழ்வு . மேலும் நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம், குமரகுரு தமிழ் மன்றம் , நித்திலம் மற்றும் ஐக்யூப் இணைந்து வழங்கவுள்ள “நிரல் விழா” – தமிழ் மொழி மற்றும் கலை மேம்பாட்டிற்கான நிரலரங்கு (Hackathon for Tamil language and art enhancement) என்ற மாபெரும் நிகழ்வின் அறிவிப்பும் இவ்வுரையின் இறுதியில் வெளியிடப்பட்டது. தமிழ் சார்ந்த துறைகளில் எதிர்கொள்ளப்படும் சிக்கல்களுக்கு தொழில்நுட்பம் கொண்டு தீர்வு காண்பதே இந் “நிரல் விழா”வின் நோக்கமாகும்.


மகாத்மா காந்தியடிகள் மற்றும் நா.மகாலிங்கம் ஐயா , ஆகிய இரு பெரும் மனிதர்களை நினைவு கூறும் நன்நாளன்று , தமிழின் வளர்ச்சிக்கான மாபெரும் முயற்சியைத் துவங்கியது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் அளித்தது.