Written by Jawahar, 2nd year, Civil Engineering

 வணக்கம் நண்பர்களே! நான், ஜவஹர், கோபிநாத் யார் என்று நான் கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? “அட…. அந்த விஜய் டிவியின்  ‘நீயா நானா’ நிகழ்ச்சித்தொகுப்பாளராக இருப்பாரே, அவர்தானே?”, என்பீர்கள். இன்னும் சிலர், அவர் ஒரு பேச்சாளர் என்று கூறுவீர்கள். அவரைப்பற்றி நாம் தெரிந்து வைத்திருப்பது அவ்வளவுதான். ஆனால் அதற்கும் மேலாக, இவர் ஒரு பெரிய எழுத்தாளர். இவருடைய எழுத்துநடை, அனைத்து வயதினரையும் கவரும் விதமாக இருப்பதும் இவருடைய ஒரு தனித்துவம். இவருடைய புத்தகங்கள் பல விருதுகளை இவருக்குப் பெற்றுத்தந்துள்ளன. பல உளவியல் சார்ந்த புத்தகங்களை எழுதியுள்ளார். பல நாட்டு அரசுகளும், இவருக்கு விருதுகள் பல வழங்கியுள்ளன. இவருடைய முதல் புத்தகமான ‘தெருவெல்லாம் தேவதைகள்’ 2007 – ம் ஆண்டு வெளிவந்தது. இவருடைய பிரபலமான மற்றொரு நூலான ‘ப்ளீஸ், இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!’ என்ற புத்தகம் எனது அப்பா வாயிலாக எனக்குக் கிடைக்கப்பெற்றது. எல்லார் மாதிரியும் இது தேவைப்படாது என்று முதலில் நினைத்தேன். படிக்கப் படிக்கத்தான் அதன் அருமை புரிந்தது. பல மனக்குழப்பங்களுக்கும் மிக எளிதாக, அனைவரையும் கவரும்படியும் பதிலளித்துள்ளார்.

“நான் எல்லார் மீதும் அன்பு செலுத்துகிறேன், ஆனால் என்னைத்தான்! ஓரம்கட்டுகிறார்கள்” என்று நாம் நினைக்கிறோம். இந்த வலையின் சிக்கல்களையும், நம்முடைய அணுகுமுறையில் இருக்கிற தவறையும் தெளிவாக தனது நூலில் வெளிப்படுத்தி இருக்கிறார். பெரிதாகத்தான் இருக்கும், படித்துப் பாருங்கள்.

உங்கள் மனைவிக்கு தலைவலி மாத்திரை கொடுத்தீங்களே! இப்போது எப்படி இருக்கிறது? நான் வேணும்மனா மருந்துபோட்டு விடட்டா என்று கேட்டீர்களா? அப்படி கேட்டிருந்தால், மருந்துக்கு வேலையே இருந்திருக்காது!”

“அன்பாக இருங்கள்..”என்று நான் சொன்னால்…. ஆரம்பிச்சுடாங்கய்யா..! என்று உடனடியாக ஏதாவது விமர்சனம் மூலையிலிருந்து வரும். நீங்கள் விமர்சனம் செய்வதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், அன்பாக இருங்கள் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் மனவியல் வல்லுநர்கள்.

அன்பு காட்டுவது உங்கள் மனசை லேசாக்குகிறது. எவ்வளவு இருக்கமான சூழ்நிலையையும் தளர்த்துகிறது (நீங்களும் இதை அனுபவித்து இருப்பீர்கள் என நம்புகிறேன்). அதனால் தான் எந்த ஊரிலும் சிருமூஞ்சிகளுக்கு மதிப்பிருப்பது இல்லை. அன்புக்கு மட்டும்தான் சில தன்மைகள் உண்டு. நீங்கள் அதை இன்னொருவரிடம் வெளிப்படுத்தினாலும் அல்லது அதை அவர் உங்களிடம் வெளிப்படுத்தினாலும், அது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

காலையில் பஸ் ஸ்டாண்டில் உங்கள் கல்லூரிப்பேருந்துக்காக காத்திருக்கிறீர்கள். அப்போது உங்கள் அருகில் ஒரு 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். உங்கள் பேருந்து வருவதற்கும் லேட்டாகிறது. ‘விடிந்துவிட்டதே! கடையைத் திறக்கனுமே! ‘ என்று வேண்டாவெறுப்புடன் கடையைத் திறக்கும் கடைக்காரர், பஸ் வருமோ வராதோ என டென்ஷனில் இருக்கும் அலுவலகர், பள்ளிக்குப் போகமாட்டேன் என தனது தாயிடம் அடம்பிடிக்கும் குழந்தை, போகவில்லை என்றால் இன்று உன்னை டிவி பார்க்கவிடமாட்டேன் என அக்குழந்தையை அதட்டும் தாய் என அனைவரும் ஒரு பரபரப்பிலும், கடுப்புடனும் அங்கு நின்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது உங்கள் அருகே நின்றுகொண்டிருந்த அந்த நபரைப் பார்க்க, அவரது பள்ளிப்பருவ நண்பர் வருகிறார். இருவரும் பார்த்துக்கொண்டு, கட்டிப்பிடித்துக்கொண்டு தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்துகிறார்கள். பிறகு இருவரும் அமர்ந்து தங்களது ஞாபகங்களையும், அனுபவங்களையும் பற்றிப்பேசிக்கொண்டு, மகிழ்ச்சியாக சிரிக்கிறார்கள். இதைப்பார்க்கும் போது, உங்களுக்குள்ளும் ஒரு ஆனந்தம் பிறக்கும் அல்லவா? இதைப் படிக்கிறபோதே, உங்களால் இதைக் கற்பனை செய்து பார்க்கமுடிந்தால், நம்மை அறியாமலேயே நமக்குள் ஆனந்தம் பிறக்கும். அந்த நபர் உங்களுக்கு யார் என்றே தெரியாது, இருந்தாலும் (அந்த டென்ஷனிலும்) உங்களுக்குள் மகிழ்ச்சி பிறக்கிறது. அதுதான் அன்பின் பலம்!

யாரோ யாருக்கோ வெளிப்படுத்துகிற அன்பு உங்களைச் சந்ததோஷப்படுத்தும் என்றால், நீங்கள் அன்பாயிருப்பதும், நம்மிடம் அடுத்தவர் அன்புடன் நடந்துகொள்வதும் எவ்வளவு பெரிய அதிசயம்!

ஒரு நிமிடம் பொறுங்கள் கோபி. இங்க எனக்கு ஒரு சந்தேகம். நான் எல்லாரிடமும் அன்பாகத்தான் இருக்கிறேன். ஆனா அவங்களும் என்னிடம் அன்பா இருக்கனும்ல!? ஒண்ணு அவங்க என் அன்பைப்புரிஞ்சுக்கனும், இல்லென்னா என்னை பைத்தியக்காரன் என்று திட்டாமல் இருக்கனும், இல்லையா?

உண்மைதான்….இங்குதான் அன்பைப் பற்றி ஒரு தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது. திரும்ப ஏதாவது கிடைச்சாதான் அன்பு செலுத்துவேன்னு நீங்க சொன்ன அது வியாபாரம். அவர்களும் என்மீது அன்பு செலுத்தவேண்டுமே என்ற சந்தேகத்துடனோ அல்லது நிபந்தனையோடோ நீங்கள் செலுத்துகிற அன்பு எப்படி முழுமையானதாக இருக்கும்.

நான் வழக்கமாக டீ குடிக்கிற கடைக்கு ஒரு நாய் வரும், வாலாட்டும். நான் அதற்கு பிஸ்கட் எல்லாம் வாங்கிப்போடுவேன். அதைத் தின்றவுடன் அது வாலாட்டுவதை நிறுத்திவிடும். பக்கத்தில் இருப்பவரிடம் போய் வாலாட்டும். எனக்கு எரிச்சலாய் வரும். இதற்கு நாமும் தான் பிஸ்கட் தருகிறோம், ஆனால் நம்மீது இதற்கு ஸ்பெஷல் கவனிப்புஇல்லையே என்று நினைப்பேன். அதற்கு அவ்வளவாக பசியில்லாத நேரத்தில் அது என்னிடம் வந்து வாலாட்டாது. என்னைக் கண்டுகொள்ளவும் செய்யாது. அப்போது அதன்மீதான எரிச்சல் மேலும் அதிகமாகும். அதனால், அது வாலாட்டினாலும் சில சமயம் அதற்கு எதுவும் வாங்கிக்கொடுக்கமாட்டேன். நான் அன்பு செலுத்துகிறேன், இருந்தாலும் அது என்னைக் கண்டுகொள்வது இல்லையே என்ற கோபம் எனக்கு.

ஒருநாள் இரவு 11 மணி இருக்கும். அந்தக் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தேன். வழக்கம்போல் அந்த நாய் வந்தது; வாலாட்டியது, நானும் வழக்கம்போல அதைக் கண்டுகொள்ளவில்லை. அன்பில்லாத ‘நாயை’ நான் ஏன் கண்டுகொள்ள வேண்டும் என்று அதற் வாலாட்டலை உதாசீனப்படுத்திவிட்டு, பைக்கில் ஏறி 50 மீட்டர் சென்று வளைவில் திரும்பினேன். மண்கொட்டிக் கிடப்பது தெரியாமல், தவறி கீழே விழுந்தேன். இப்போது பைக் என்மேல கிடக்கிறது….என்னால் எழவும் முடியவில்லை. எப்படித்தான் அங்கு ஓடிவந்ததோ தெரியாது அந்த நாய், எனைச்சுற்றிச் சுற்றி வந்து குரைத்தது….பதறியது… தீடிரென ஓடிப்போய் டீக்கடை முன் நின்று குரைத்தது. அதன் குரைச்சல் சத்தம் தாளாமல் டீக்கடை மாஸ்டர் வெளியே வந்து, நான் விழுந்துகிடப்பதைப் பார்த்துவிட்டு என்னிடம் ஓடி வந்தார்.

அன்றைக்கு அந்த நாய் குரைத்த குரைப்பும், அது அடைந்த பதட்டமும் இன்றைக்கும் என் கண்முன்னால் நிற்கிறது. இத்தனை நாளாய் ‘அன்பில்லாத நாய்’ என அதை பலமுறை மனதிற்குள் திட்டியிருக்கிறேன்.  மெதுவாக எழுந்து நடந்து சென்று டீக்கடை பென்ச்சில் உட்கார்ந்தேன், மாஸ்டரும் எனக்குத் தண்ணீர் கொடுத்தார். அந்த ‘நாய்’ மீண்டும் என்னிடம் வந்து வாலாட்டியது. உடனே என் வண்டிக்கவரில் இருந்து பிஸ்கட் கட்டைப்பிரித்து, அதற்குக் கொடுத்தேன். என்னை உற்றுக்கவனித்தவாறே வாலாட்டிக்கொண்டு ஓடிவிட்டது. மாஸ்டர் சொன்னார்… அதுக்கு செமப்பசி, உங்களுக்கு அடிபட்டதுல ரொம்ப கலங்கிபோயிடுச்சு போலிருக்கு… அதன் எதுவும் சாப்பிடாம போவுது’ என்றார். அதைக் கேட்டதும் எனக்கு ரொம்பவே வலித்தது. இப்படித்தான் என் மீது அவர் அன்பு காட்டுவது இல்லை என்று பலரையும் நினைத்து, அவர்கள் மீது அன்புகாட்டவும் தயங்குகிறோம்.

உங்கள் அன்பு உண்மையானதாகவும், நியாயமானதாகவும் இருந்தால் எதிர்தரப்பினரும் அப்படி இருந்துதான் ஆகவேண்டும். அன்பு என்ற பெயரில் அடுத்தவரை வதைக்கிறபோதோ அல்லது அளவுக்கு மீறி எதிர்பார்க்கிறபோதோதான் நீங்கள் நினைப்பது கிடைப்பதில்லை”

இது ஒரு பக்கம்… எதிர்பார்ப்பில்லாத அன்பு இனிமையானது. ஆனால், அன்பு செலுத்துகிறவரை அலட்சியப்படுத்துதலும், அன்பை வெளிப்படுத்துவதில் கருமியாய் இருப்பதும் அன்பினால் கிடைக்கிற சந்தோஷத்தை உணராததால்தான்.

தான் கண்டிப்பான பேர்வழி என்று காட்டிக்கொள்வதற்காகவே இறுகிய முகத்தோடு திரிபவர்கள் ஏராளம். தான் அன்பு காட்டினால் அதை மற்றவர்கள் பலவீனமாக எடுத்துக்கொள்வார்க்ள என்று  அவர்கள் நினைப்பதுதான் இதற்குக் காரணம். ஆமாம்… அவர் ஒரு கறார் பேர்வழி என்ற பட்டம் கிடைக்கும்ல!? பிள்ளையிடம் அன்பை வெளிப்படுத்தினால் அவர்கள் கெட்டுப்போவார்கள் என நினைக்கும் அப்பாக்கள், மாணவனிடம் அன்பு காட்டினால் மரியாதை இருக்காது என நினைக்கும் ஆசிரியர்கள், கண்டிப்பாக இருந்தால்தான் வேலை நடக்கும் என்று தனது ஊழியர்களிடம் அன்பை வெளிப்படுத்தத் தயங்கும் மேனேஜர்கள் என இப்படி ஒவ்வொருவரும் அன்பை வெளிப்படுத்தக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள்.

மார்க் லூயிஸ் உங்களுக்கெல்லாம் (நமக்கெல்லாம்) ஒரு அறிவுரை கூறுகிறார்: ” நீங்கள் எதற்காகவெல்லாம் அன்பை வெளிப்படுத்தத் தயங்குகிறீர்களோ அவற்றையெல்லாம் விட அன்பு உயர்ந்தது.”

ஒரு ‘நீயா நானா’ நிகழ்ச்சியில், வேலைக்குச் செல்லுகிற பெற்றோர்கள் ஒருபுறம், அவர்களின் பிள்ளைகள் மறுபுறம். நிறைய பிள்ளைகள் வைத்தக் குற்றச்சாட்டு, ஏனைய பெற்றோர்கள் போல இவர்கள் எங்கள் மீது அன்பு காட்டுவது இல்லை என்றுதான். ஒரு தந்தை அதற்கு விளக்கம் கொடுத்தார். “அவர்களுக்காகத் தானை இவ்வளவு கஷ்டப்படுறோம்…. அவர்களுக்கு எங்கள் அன்பு புரியவில்லை என்றார்.” இந்த வேலையை எல்லாம் தூக்கிப்போடுங்கள் – எங்கள் மீது அன்பு காட்டுங்கள் என்று ‘பொட்டில்’ அடித்தாற்போல் சொன்னாள் ஒரு சிறுமி.

உண்மையில் குழந்தைகள் மேல் இருக்கும் அளவற்ற அன்பால்தான் பெற்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், அந்த அன்பை வெளிப்படுத்தாதபோது அந்தக்குழந்தைக்கு எப்படி அது புரியும். ஒரு நிலையில் அவர்கள் இருவருக்கும் உள்ள இடைவெளி அதிகமாகி, தன் மீது அன்பு காட்டுவது போல நடிப்பவரை நோக்கி அக்குழந்தை நகரும்.

இங்கே அன்பை வெளிப்படுத்தாத காரணத்தால் குழந்தையும் சந்தோஷமாக இல்லை, அக்குடும்பமும் சந்தோஷமாக இல்லை. உங்கள் கடும் உழைப்பும் கூட இங்கு அர்த்தமில்லாததாகிவிடுகிறது.

இயல்பிலேயே அன்பை வெளிப்படுத்தத் தயங்குகிறவர்கள்தான் இங்கு அநேகம். கோபத்தை, எரிச்சலை, வன்மத்தை வெளிப்படுத்தத் தயங்காத நாம், ஏன் அன்பை வெளிப்படுத்தத் தயங்கவேண்டும். வெறும் உணர்தலிலேயே புரிந்துகொள்ள வேண்டியதுதான் அன்பு, என்றெல்லாம் தத்துவம் பேசக்கூடாது, ‘எம்டன் மகன் – நாசர் போல’

5 வருடம் கழித்து வீட்டுக்கு வருகிற பிள்ளையைப் பார்த்தவுடன் அம்மா ஓடிப்போய் அணைத்துக்கொள்கிறாள். சில அப்பாக்கள்…. கரகரத்த குரலில், “கைகழுவீட்டு வா சாப்பிடலாம்”….என்கிறார்கள். காரணம், அவர் அப்படித்தானாம்… அன்பையெல்லாம் வெளிப்படுத்த மாட்டாராம். ஏன் சார்…உங்க பையன் சாப்பாட்டுக்கு வழியில்லாமயா உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான்?

அடபோப்பா… இது என்ன சினிமாவா!? “நானெல்லாம் இரும்பு மாதிரி” என்று டயலாக் விடுவீர்கள்… அப்புறம் ஏன் சார் அவன் தூங்கிய பிறகு அருகில் போய் அமர்ந்துகொண்டு, “கருத்துப் போயிட்டான்லடி நம்ம பையன்? ” என்று உங்கள் மனைவியிடம் சொல்லிக்கவலைப்படுகிறீர்கள்.

உங்கள் பிள்ளைக்குத் தெரியாமல் வெளிப்படுத்த அன்பு ஒன்றும் மோசமான விஷயம் இல்லையே! நீங்க இரும்புதான் – ஆனால் அந்தப் பதக்கத்தைக் காப்பாத்த எத்தனை நாளைக்கு இப்படி மனதுக்குள்ளயே அன்பைச் சுமந்துகொண்டு அலைவீர்கள்.”

நீங்கள் அன்பானவரா இல்லையா என்பதை அம்மாவிடம் தான் மகன் கேட்டுத்தெரிந்துகொள்ள வேண்டுமா? அல்லது வேலுநாயக்கரிடம் கேட்கிறமாதிரி ‘நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா’ என்று விசாரிக்க வேண்டுமா?

நீங்கள் 5 வருடம் கழித்து வருகிற பிள்ளையை மனசு ஆசைப்படுகிற மாதிரிஓடிப்போய் அணைத்துக்ககொண்டால், தூணுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த அவன் தங்கை, ஓடிப்போய் கட்டிக்ககொண்டிருக்கும். உங்கள் வீட்டு நாய்க்குட்டி ஓடிவந்து குதித்திருக்கும்! உங்கள் அம்மா – பாட்டி பேரனை உச்சிமுகர்ந்து முத்தம் கொடுத்திருப்பார். 5 வருடம் கழித்து வருகிற பிள்ளைக்கு அதுதானே வரவேற்பு! அவன் அசைப்பட்டதெல்லாம் இதற்காகத்தானே. இட்லி திங்கவா இவ்வளவு தூரம் வந்தான்? நீங்கள் அன்பை வெளிப்படுத்தியிருந்தால், நீங்கள் மட்டுமல்ல அந்த இடமே மகிழ்ச்சியில் திளைத்திருக்குமே.

இங்கு பிரபஞ்சமே அன்பால் நிறைந்திருக்கிறது. நீங்கள் ஏன் ஓடி ஓடி ஒளிந்துகொள்கிறீர்கள். என் கடமையைச் செய்வதன் மூலம் அன்பு செலுத்துகிறேன்…. அதை மற்றவர்கள் புரிந்துகொள்வதில்லை…என்றெல்லாம் விளக்கம் சொல்லவேண்டாம். மனைவிக்கு தலைவலி மாத்திரை வாங்கிக்கொடுத்தீர்களே… இப்போது எப்படி இருக்கிறது? நான் வேணும்னா மருந்துபோட்டு விடட்டா என்று நீங்கள் கேட்டிருந்தால், அந்த மாத்திரைக்கு வேலையே இருந்திருக்காது.

அன்பாய் இருப்பதும், அதை பிற உயிர்களிடத்தில் வெளிப்படுத்தவும்தான் மனித இயல்பு. “நாங்க இரும்பு பார்ட்டி” என்று மார்தட்டிக்கொண்டு திரிபவய்களுக்கெல்லாம் ஒரு விஷயம். உங்கள் கழுத்தில் ‘அவர் ரொம்ப ஸ்டிரிக்ட்டு ‘ என்ற பதக்கத்தை தொங்கவிட்டு விட்டு, உங்கள் முதுகுக்குப் பின்னால் நிறையபேர் முனகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அன்பைப் பெறுவதும், அன்பைக் கொடுப்பதும் ஒரு ஆத்மார்த்தமான அனுபவம். “இரும்பு மனிதன்” என்ற உப்புப் பெறாத பட்டத்துக்காக, அந்த ஆத்ம அனுபவத்தை அடகுவைத்து விடாதீர்கள்.”

போங்க சார்….வீட்டுக்குப் போய் உங்க அம்மாட்ட, அப்பாகிட்ட, அண்ணா, அக்கா, தம்பி, தங்கைகிட்ட எல்லார்கிட்டயும் அன்பாப் பேசுங்க…

உங்களிடம் அன்பு செய்ய இந்த உலகமே காத்திருக்கிறது.