Jawahar, 3rd Year Civil Engineering Department

பணிமுடிந்து அறைக்கு வந்த களைப்பில் சோஃபாவில் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான் சுதாகர். நேரத்தை விழுங்கிக்கொண்டிருக்கும் கடிகாரத்தின் பெரிய முள் பன்னிரண்டு என்ற எண்ணைக் காட்டியது.

அதை உற்று கவனித்தவாறே அவன் கண்கள் இருண்டன. திடீரென அவன் முன் அவனது உருவம் போலவே இன்னொரு உருவம் தோன்றியது. ஆம், அது தான் அவன்  மனம். தூக்கத்தில் அவனது இமைகள் கணத்தன. அந்த அரை தூக்கத்தில் அவன் அவனது ‘நான்-ஐ’ விழித்துப் பார்த்தான்!

சுதாகர் கோவையிலுள்ள ஒரு தொழில் தொடக்க நிறுவனத்தில் ஒரு குழுவின் சூப்பர்வைசராக பணியாற்றுகிறான். அவன் ஒப்பந்த வேலையாள். நிறுவனத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் சில பணியாளர்கள் ஜூலை மாதத்திலேயே வேலையைவிட்டு நின்றுவிட்டனர். எனவே அந்நிறுவனம் படிப்பு முடித்துவிட்டு வேலைதேடிக்கொண்டிருக்கும் என்ஜினீயரிங் பட்டதாரிகளை, ஆறுமாதத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு எடுத்தது. ஆறு மாதம் முடிந்தபின்னரே மொத்த சம்பளமான அறுபதாயிரம் சம்பளமும் வழங்கப்படும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த வேலைக்கு சுதாகரும் விண்ணப்பித்திருந்தான், அவனது விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவன் தனது ஊரான திருச்சியிலிருந்து கிளம்பி கோவை வந்தான். ஆபிசிலேயே ஊழியர்களுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டது. சுதாகர் வீட்டின் மூத்த மகன். அப்பாவின் மறைவுக்குப் பிறகு அவனே குடும்பச்சுமைகளை கவனிக்கவேண்டியிருந்தது. இதற்கு முன்னர் திருப்பூரில் உள்ள பைப் உற்பத்தித் தொழிற்சாலையில் வேலைசெய்துகொண்டிருந்தான். கடன் சுமையும் அதிகமானாதால்….. அந்த சிறு நிறுவனத்தில் வழங்கப்படும் சம்பளம் போதவில்லை. எனவே வேறொரு நல்ல வேலைக்கு முயற்சிசெய்துகொண்டிருந்தான். அது கிடைக்காமல்போகவே, வழியின்றி இதில் சேரவேண்டியதாயிற்று. அன்றிரவு அவன் தனது எதிர்காலத்தை எண்ணியும், குடும்பத்தை எண்ணியும் ,  தனது கனவுகளை எண்ணியும் முகம் புதைத்தவாறு சாய்ந்துக் கொண்டிருந்தான். அப்போது ‘ஏ சுதாகர்! ‘ என ஒரு குரல் எழும்பியது. அந்த மங்கிய மின்சார விளக்கின் ஒளியில் அந்த சூன்யத்தை வெறித்து உற்று நோக்கினான்.

அப்போது, அவனது பிரதி பிம்பம் அவன் முன் தோன்றியது. அதனிடம் அவன் பேச்சுகொடுக்கத்தொடங்கினான். 

எண்ணம் 1:

சுதாகர் :’நீ யார்? ‘

மனம்:’நான் தான் உன் மனம்; உன் ஆசை; அல்லது உன்னாலும், உலகத்தாலும் சாகடிக்கப்பட்ட ‘நீ’.’

அந்த உருவம் அவனைப்போலவா இருந்தது?! இல்லை அது அவனைவிடவும் மெலிந்து, கண்கள் குழிந்தாழ்ந்து காணப்பட்டது. அதன் உடலில் வலுவில்லை!

மனம்: ‘நான் உன்னிலிருந்து வெளிப்பட்ட நீயேதான். என்னைவிட்டு எங்கே போகிறாய்? உன் ஆசைகள் எல்லாம் உனக்கு மறந்துவிட்டதா?’

சுதாகர் : ‘ஓ  நீயா? எனது தனிமையை நிரப்ப வந்தாயா? இல்லை என்னை குறை சொல்ல வந்தாயா!’

மனம்: ‘நான் உன்னை எப்போது குறை சொல்கிறேன், பிறரைக் காட்டிலும் நீ எல்லாவகையிலும் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்பதுதான் எனது ஆசை, அவ்வளவே! ‘

சுதாகர் : ‘இப்போது நீ எங்கே செல்கிறாய்?’

மனம் : ‘நான் உன்னைவிட்டு விலகநினைக்கிறேன்,  ஏனெனில் நீ என்னையும், எனது ஆசைகளையும் நிறைவேற்றவில்லை.’

எண்ணம் 2:

சுதாகர் : ‘ஓ, அப்படியா! நல்லது. நீ தயவுசெய்து சென்றுவிடு. நான் இனியாவது நிம்மதியாக இருப்பேன். உனது இம்சை இனி இருக்காது. நான் எனது தொழிலில் நன்றாக ஈடுபடுவேன். கொஞ்சம் பணம் சேர்ந்த உடன் ஒரு சுயதொழில் ஒன்றைத்தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.’

மனம் : ‘சுயதொழில் தொடங்க நிறைய அறிவு, திறமை பக்குவம் வேண்டுமே… அது உன்னிடம் சுத்தமாக இல்லை. நீ அதற்கு லாயிக்கில்லாதவன். உன்னால் அதில் திடமாக நிற்கமுடியாது.’

சுதாகர் : ‘எதை வைத்து அப்படிச்சொல்கிறாய்? நான் எதில் குறைந்தவன்? ‘

மனம் : ‘உனக்கு இதில் போதிய அனுபவம் இல்லை. அது மட்டுமல்ல… உனக்கு யார் உதவுவார்கள்? உன்னை யார் முதலில் அங்கீகரிப்பார்கள்? ‘

சுதாகர் : ‘ஆனால் முதலில், தொழிலைப் பழகினால் தானே நீ சொன்ன அறிவு, அனுபவம்,  திறமை போன்றவற்றையெல்லாம் பெறலாம்?’

மனம் :’இருந்தாலும் உன்னால் முடியாது. கலைத்துறையில் சாதிக்கவேண்டும் என்று விரும்பினாயே அதை நிறைவேற்றினாயா? அன்று நீ உனது நண்பன் மாரிமுத்துவிடம் சென்று 5000 ரூபாய் கடன் கேட்டாய். உன்நண்பனே அதை உனக்கு வழங்கவில்லை. பிறகு எப்படி உன்னால் சுய தொழில் தொடங்கி… அதில் வெற்றிகாண முடியும்? ‘

சுதாகர் : ‘ என்னைக் குழப்பாதே…இதைப்பற்றி இப்போது பேசவேண்டாம்…விட்டுவிடு’

மனம் : ‘சரி…’

எண்ணம் 3:

மனம்: ‘உன்னுடன் படித்த நண்பர்கள் எல்லோரும் இப்போது செட்டில் ஆகிவிட்டார்கள் தெரியுமா! நீ மட்டும் தான் இன்னும் சம்பாதிக்க வழி தெரியாமல் இருக்கிறாய்.’

சுதாகர் : ‘அதற்கு நான் என்ன செய்ய? நான் அவர்களைக்காட்டிலும் நல்ல மதிப்பெண் பெற்றேன். ஆனால் இருந்தாலும் அவர்கள் வசதியானவர்கள். எனவே அவர்கள் அரசாங்க வேலையிலேயே சேர்ந்துவிட்டார்கள். என் நிலை அப்படி இல்லையே.’

மனம்: ‘அதைத்தான்… அதைத்தான் நானும் கூறுகிறேன். நீ ஒரு துரதிஷ்டாலி.’

சுதாகர் : ‘ஐயோ! என்னைவிட்டு நீ நீங்கிவிடு. என்னைப் பிறரோடு ஒப்பிடாதே…!  அவர்கள் வேறு….நான் வேறு’

மனம் : ‘இருந்தாலும் நான் உண்மையைத்தானே கூறுகிறேன். ‘

சுதாகர்: ‘சரி, உனக்கு என்ன தான் பிரச்சனை ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய் ? ‘

மனம்: ‘நான் ஒரு போதும் துன்பப் படுத்த வில்லை, நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் எண்ணுகிறேன்.’

சுதாகர் : ‘ஓ, மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ?’ எதிர்காலமே கேள்வி குறியாக உள்ளது. இதில் எப்படி வரும் மகிழ்ச்சி.

மனம் : காலம் வரும் போது நலமாக இருப்பாய் நம்பிக்கையோடு இரு சுதாகர்…

எப்போது முதியோராக ஆன பின்பா? இல்லை, என்னோடு உன்னை எரிக்கும் போதா?

பிறந்ததற்காக வாழ்ந்து வருகிறேன். என்ன வாழ்க்கை இது?

இப்படியே எண்ணங்களும், அதன் வாயிலாக எழுந்த விவாதங்களும் தொடர்ந்தன….