By Jawahar , 2nd year , Civil Engineering

நீங்கள் டிவி பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அப்போது அந்தப் பிரபலமான சேனலில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகிறது. 15 நிமிடங்களுக்கு உங்கள் வீடியோ சேனலில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கிறார்கள். அப்போது உலகமே அந்த சேனலைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தாங்களாகவே, ஏதாவது வித்தியாசமாக வீடியோயெடுத்து, அதை எங்கள் சேனலுக்கு அனுப்பினால், அதில் சிறந்த வீடியோக்களைத் தேர்ந்தெடுத்து அதை ஒளிபரப்புவோம் என்று அறிவிக்கிறார்கள். உங்கள் பக்கத்து வீட்டுக்காரர், உங்களிடம் சண்டையிட்ட நண்பர், எப்போதும் எரிந்துவிழும் உங்கள் மனைவி, தெருவில் இருக்கும் கடைக்காரர், அப்பா, அம்மா, என அனைவர் மத்தியிலும் நீங்கள் பிரபலமடையலாம் அல்லவா?

வணக்கம், நான் உங்கள் ஜவஹர். எழுத்தாளர் சுஜாதாவின், ‘கற்றதும்….பெற்றதும்…. ‘ என்ற நூலைப் படித்தேன். மனிதன், தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்வதற்காக  என்னவெல்லாம் செய்யத்தயாராக இருக்கிறான் என்பதை அழகாக எழுதியிருந்தார். அதை உங்களுக்கு ஷேர் செய்யவே இந்தப் பதிவு.

Sujatha , Indian author

சரி, விஷயத்திற்கு வருவோம். யோசித்துப் பாருங்கள்…. உலகமே உங்கள் முகத்தைப் (அழகை)  பார்க்கப்போகிறது. வெறும் 15 நிமிடங்களில் நீங்கள் உலகப்பிரபலம் அடையாவிட்டாலும், குறைந்தது ஊர்ப்பிரபலமாகவாவது ஆகலாம், அல்லவா? நம் வாழ்க்கையில்…. இனி இதுபோன்ற வாய்ப்பு கிடைக்குமோ இல்லையோ, இந்த வாய்ப்பை இழக்கக்கூடாது என நம்மில் பெரும்பாலானோர் நினைக்கலாம். 15 நிமிடத்திற்கு வித்தியாசமாகவும், அனைவரும் ரசிக்கும்படியும் எதாவது செய்து அதைப்பதிவேற்ற நினைக்கலாம். அதற்காக மெனக்கெட்டு வித்தியாசமாக எதாவது செய்வார்கள். உதாரணத்திற்கு, அவர்கள் தங்களது (இனிமையான) குரலில் பாடலாம், ஆடலாம் அல்லது தன்னைத்தானே வருத்திக்கொள்ளலாம் பதற்றத்தில் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம்செய்து, அதைப்பதிவேற்றுவார்கள்.

அந்தத் திரையரங்கம் தான் இன்றைய சோஷியல் மீடியா. அந்தத் திரைதான் நம் கையில் இருக்கும் ஸ்மார்ட் ஃபோன்.

1985-ல், அமெரிக்காவின்அ தனியார் தொலைக்காட்சியான MTV-ல்,  Andy Warhol’s Fifteen Minutes Fame என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். கிராமங்களிலும், நகரங்களிலும் இருக்கும் சிறிய இசைக்கலைஞர்களை அழைத்து, அவர்களை பிரபலப்படுத்துவதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கம். இந்த நிகழ்ச்சித் தொடரில் விருந்தினராகத் தலைமை தாங்கியவர், Andy Warhol என்னும் உலகப்புகழ்பெற்ற ஓவியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். அவர் அந்த நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கியதற்கு பின்னால், ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு உள்ளது. 1966-ல், அவருடைய ஓவியங்களுக்கான கண்காட்சி ஒன்று நடைபெற்றது. உலகெங்கிலும் இருந்து மக்கள் பலரும் அக்கண்காட்சிக்கு வந்திருந்தனர்.

அந்த விழா நிறைவின்போது மக்கள், அவருடன் சேர்ந்து ஃபோட்டோ எடுக்க முயன்றனர். அப்போது அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைப்பார்த்த Andy Warhol, “மக்கள் அனைவரும் பிரபலமடைய விரும்புகின்றனர்” என்றார். இதைக்கேட்ட அவ்விழாவின் ஃபோட்டோகிராஃப்பர், “ஆம், எல்லாம் ஒரு பதினைந்து நிமிட புகழ்ச்சிக்குத்தான?!” என்றார். அவர் சொன்ன வார்த்தைகள் Andy  மனதில் ஆழமாகப் பதிந்தன. நீண்ட நாட்கள் அதைக்குறித்து யோசித்துக்கொண்டே இருந்தார். அதன் பிறகு அவர் பங்குபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும், 15 minutes fame என்ற வார்த்தையை உபயோகித்துக்கொண்டே இருந்தார். “எதிர் காலத்தில் மக்கள் அனைவரும் 15 நிமிட புகழ்ச்சியின் பின்னால் ஓடுவார்கள். இப்போதிருக்கிற மீடியா மாறி, சோஷியல் மீடியா அதிகமாகும். சாதாரண மக்கள் கூட (எளிதில்) பிரபலமடைவார்கள்”, என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

தமிழ்நாட்டிற்கு இந்த “15 நிமிட புகழ்” என்பது எப்படி வந்தது? எழுத்தாளர் சுஜாதாவால்தான்! அவர் தன்னுடைய புகழ்பெற்ற நூலான ‘கற்றதும், பெற்றதும்’ என்ற நூலில், டிவி ஷோக்களைக் கேலி செய்கிறார். “டிவி நிகழ்ச்சிகளில் மிகவும் மோசமானது, மக்கள் தொகுப்பாளருக்கு ஃபோன் செய்து பாட்டுக்கேட்கும் நிகழ்ச்சிதான்…தொகுப்பாளரிடம் 5 நிமிடம் பேசவேண்டும் என்பதற்காக மக்கள், செயற்கைத்தனமான கேள்விகளைக்கேட்கிறார்கள். அவர்கள் முகங்களில் போலியான ரியாக்ஷனை மட்டுமே காணமுடிகிறது. 5 நிமிடம் அவர்களுடன் ஃபோனில் பேசினால், நம் தெருவில் நாம் அன்று பேசுபொருள் ஆகிவிடலாம்….நம் நண்பர்களிடையே பிரபலம் அடைந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அந்தப் அற்பப் புகழ்ச்சிக்காக அழைகிறார்கள். Andy சொன்ன அந்த, ’15 நிமிட புகழ்’ சரியாகத்தான் உள்ளது” என்று எழுதுகிறார்.

சமூக வலைத்தளங்களில் நல்ல கருத்துக்களை பதிவிட்டனர். ஆனால் பிரபலம் அடையும் நோக்குடன், மக்கள் வித்தியாசமான வேலைகளில் ஈடுபடுகின்றனர். மற்றவர்கள் கவனத்தைப் பெறுவதற்காக, பலர் தன்னையே வருத்திக்கொள்கிறார்கள். ஆம்….”15 minutes fame” சரியாகத்தான் உள்ளது.

நாம் அன்றாடம் செய்திகளில் பார்க்கிறோம். அதிக லைக்குகளை பெறுவதற்காக சிலர், உயரமான கட்டிட உச்சிகளில் நின்றபடியும், உயிரைக்கொல்லும் மிருகங்களைச் சீண்டியும் ஃபோட்டோ எடுக்கிறார்கள். உயிரையும், அன்றாட வாழ்க்கையையும் விட லைக்குகள் தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள். அவ்வாறு இல்லாமல், நம் தனித்திறனை மேம்படுத்திக்கொள்ளும் பொருட்டு, சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவது நன்று.