“காகிதம், பொருள், பணம்” என எல்லாவற்றிலுமே மகாத்மா காந்திஜியின் சிக்கனம் இந்த உலகமே அறிந்தது. காந்திஜி அவசரமாக ஏதாவது முகவரியையோ அல்லது எண்களையோ எழுதி வைக்க நினைத்தால்கூட ஒரு தனித்தாள் கொண்டு எழுதிவிடுபவர் அல்ல. அவர் தனக்கு வந்த கடிதங்களின் எழுதப்படாத பின்புறத்தில்  ஒரு புத்தம் புதிய கட்டுரையே எழுதும் வல்லமை பெற்றவர். அதுவும் ஒரு பக்க தாள்களை சேமித்து வைத்து, அதிலும் ஒரு ஓரத்தில் சிறியதாக கிழித்து எழுதும் பழக்கம் உடையவர் காந்திஜி. அவர் எதையும் வீணடிக்காமல் உபயோகிக்கும் பழக்கம் உடையவர்.

    காந்திஜி தண்ணீரை உபயோகிக்கும்போது மிகுந்த கவனமாகவும் சிக்கனமாகவும் இருந்தவர். குளிப்பதற்குக்கூட  ஒரே ஒரு வாளி நீரையே பயன்படுத்தியவர். அவர், மக்களுக்கு எவையெல்லாம் எளிதாக  கிடைக்கவில்லையோ, அவற்றையெல்லாம் தன் உணவில் சேர்த்துக் கொள்ளாதவர். ஏழை மனிதர் ஒருவர் உண்ணும் உணவு எதுவோ அதுவே காந்திஜி அவர்களின் உணவாகும். அந்த வகையில்  எப்போதும் அவருடைய உணவில் பூசணிக்காய் அல்லது பரங்கிக்காய்  இருக்கும்.

    ஒருமுறை காந்திஜி அவர்களின் மனைவியான கஸ்தூரிபா காந்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, உணவில் உப்பை தவிர்க்குமாறு மருத்துவர் கூறினார். ஆனால் இயல்பாகவே சற்று துடுக்காக பேசும்  அவரால் மருத்துவரின் அறிவுரையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.’உப்பு போடாமல் எப்படி சாப்பிடுவது?’ என கோபமாக மருத்துவரைக் கேட்டார். காந்திஜியும் தன் பங்குக்கு மனைவிக்கு எடுத்துச் சொல்ல முயன்றார். அதற்கு கஸ்தூரிபா, ‘யார் வேண்டுமானலும் சொல்லலாம். ஆனால் உப்பு இல்லாமல் எப்படி சாப்பிட முடியும். உங்களால் சாப்பிட முடியுமா?’ என்று காந்திஜியைக்  கேட்டார். காந்திஜி சற்றும் யோசிக்கவில்லை. ‘ சரி. நான் சாப்பிடமால் இருக்கிறேன்’ என்றார். காந்திஜி இப்படிதான் உப்பு சேர்த்துக் கொள்வதை நிறுத்தினார்.

காந்திஜியின் அறவழி சென்று, நாமும் வளமான இந்தியாவை மேலும் செழிக்க செய்வோம்!!!