தமிழுக்குக் கட்-அவுட்!
ஜில்லென்ற ஒரு காலை. எழுந்து குளித்துவிட்டு வேலைக்கு வழக்கம்போல் புறப்படுகிறான் உயர்திரு பொதுஜனம். வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி. எப்போதும் ஆங்கிலத்தில் பளிச்சிடும் பல விளம்பர போர்டுகள் தமிழுக்கு மாறி இருந்தன. ஏதேனும் காரணமாக இருக்கும் என நினைத்துக்கொண்டு ஆபீசுக்குப் புறப்பட்டான். உள்ளே சென்று “Excuse me” என்றவனுக்கு “உள்ள வாங்க” என்று பதில் வந்தது. அதுதான் அவனுக்கு உலக அதிசயம். அதுவரை அவனுடைய Boss தமிழில் பேசி அவன் பார்த்ததே இல்லை. இத்தனைக்கும் அவர் ஒரு தமிழர். பின் மதிய வேலையில் அவன் கம்பெனியில் இண்டர்வியூவுக்கு வந்திருந்தவர்களுக்கு Group Discussion சுற்று நடத்தப்பட்டது. அதில் மனதில் தோன்றுபவைகளைத் தமிழில் தான் கூற வேண்டும் என ஆணையிடப்பட்டது. மீண்டும் அதிர்ந்தான். அப்போது தான் அவனுக்குப் புரிந்தது அன்று காலை முதல் அவன் பார்த்தது அனைத்துமே தமிழ் தான் என்று. திடீரென ஒரு நாள் இப்படி எல்லாம் நடந்தால் எப்படி இருக்கும்? ஆம், இதுவரை கூறியதெல்லாம் கனவு தான்! வீட்டுக்கு வந்த விருந்தினருக்குப் பஞ்சு மெத்தையைக் கொடுத்துவிட்டு மண் தரையில் தான் படுத்துக்கொள்ளும் பழக்கம் தமிழனுக்கு இயல்பாகவே உண்டு. பழக்க தோஷத்தில் அதே முறையை மொழி விஷயத்திலும் பின்பற்றி விட்டது தான் வேதனை.
தமிழுக்காக நாம் பேசியது அதிகம். மிக அதிகம். பேச்சுக்கு நன்றாகக் கை தட்டுகிறார்களா என பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக மேடையை விட்டு இறங்கி வந்தவர்களே நம் மண்ணின் மைந்தர்கள். அப்படி அவர்கள் ஒவ்வொரு முறை இறங்கி வந்த போதும் அவர்களோடு தமிழும் கீழே இறங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் நம்மை அடிமைப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. நம்முடைய அடையாளம் தமிழ் தான் என்ற எண்ணம் நமக்கு இல்லாமல் போனது தான் இதற்குக் காரணம். ஒரு வைத்தியத்துக்காக நாங்கள் ஐதராபாத்துக்குக் போயிருந்தோம். அங்கு நான் மருத்துவமனையில் கண்ட காட்சி என்னை அதிசயிக்க வைத்தது. அப்படி என்ன பெரிய காட்சி என்கிறீர்களா? அங்குள்ள மருத்துவர்கள் அவர்களுக்குள் தங்கள் தாய்மொழி தெலுங்கில் பேசிக்கொண்டிருந்தார்கள். இது எனக்கு ‘அதிசயமாக’ தெரிந்ததற்குக் காரணம் அப்படி ஒரு காட்சியை இங்கு நான் கண்டதே இல்லை. நம்மவர்கள் எல்லாம் பெரிய இடத்தையோ பெரிய பதவியையோ அடைந்துவிட்டால் அவர்களுக்குள் ஆங்கிலத்தில் உரையாடுவது தான் கௌரவம் என நினைப்பார்கள். தமிழ் தெரியாத மக்கள் வந்தாலும் அவர்களும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பார்களே தவிர அவர்களுக்காகக் கூடத் தமிழில் பேச மாட்டார்கள். கெத்து குறைந்து விடுமாம்!
தூரத்தில் இருப்பதை அழகாகவும் நம் பக்கத்தில் இருப்பதை அசிங்கமாகவும் நினைக்கும் மனநிலை தமிழனுக்கு எப்படி வந்தது எப்போது வந்தது என்பது தான் தெரியவில்லை. இப்போது கூட தமிழுக்கு இங்கு மரியாதையே இல்லை என்று சொல்லிவிட முடியாது. இருக்கிறது.. மேடைகளில் மட்டும்! ‘வணக்கம்’ என்று சொன்னாலே மயங்கிவிடும் தமிழன், அதன் பிறகு முழுவதும் ஆங்கிலத்தில் பேசினாலும் கைதட்டி ரசிக்கிறான். மற்ற மாநிலங்களிலும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. அலங்காரத்துக்காக அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது. இங்கு தமிழே அலங்காரத் தோரணம் தான். தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து வாழ்பவர்கள் கூட பெரிய மேடைகளைப் பார்த்தவுடன் ஷேக்ஸ்பியரின் பேரன்களாக மாறிவிடுவதைப் பார்க்கும்போது ஆத்திரமாக வரும். ஆனால் நம்முடைய பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அமைதியாக இருக்க வேண்டியிருக்கிறது. இதற்காக ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காமல் செந்தமிழில் நாடகம் நடத்தச் சொல்லவில்லை. நான் மட்டும் பெரிய பதவிகளில் இருந்திருந்தால்/எதிர்காலத்தில் இருந்தால், தமிழர்கள் கூடும் முக்கிய மேடைகளில் விருந்தினர்களும் விழா நடத்துபவர்களும் தமிழில் தான் பேச வேண்டும் என சட்டம் போட்டிருப்பேன்/போடுவேன். இதுவும் தமிழை வைத்துப் பேர் வாங்க நினைக்கும் மேஜிக் பேச்சு அல்ல. மற்ற ஊர்களில் அவர்கள் தாய்மொழிக்குக் கொடுக்கும் மதிப்பு என்னை மனம் திறந்து பேச வைக்கிறது. உண்மைகளை உளற வைக்கிறது என்று கூட வைத்துக்கொள்ளலாம். இதெல்லாம் உண்மையில் நடக்காது என்பதால்தானோ என்னவோ, நடப்பது போல் ஒரு கனவுக் காட்சியுடன் இதை எழுதத் தொடங்கினேன். என் அருமை மக்கள் தமிழில் பேசுவதில்லை என்பதை விட தமிழில் பேசுபவனை எவ்வளவு ஏளனமாகப் பார்க்கிறார்கள் எப்படிக் கேவலமாய் நடத்துகிறார்கள் என்பது தான் என் முதல் கோபம். அவன் என்ன தவறு செய்தான் அவனைப் பார்த்து நீங்கள் சிரிப்பதற்கு? தாய் தந்தையின் பெயரை Initial ஆக வைத்துக்கொண்டது தான் அவன் செய்த தவறா? உயர் பதவிச் சீமான்களே.. இனிமேலாவது தமிழில் பேசுபவனை வெளிநாட்டுக்காரனென நினைத்து வெறிக்கப் பார்க்காதீர்கள். அவன் தான் உண்மையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்!
தமிழா.. நீ என்ன தான் இப்படியெல்லாம் வெளியில் தமிழை அவமானப்படுத்தினாலும் ஒரு விஷயத்தில் தமிழிடம் தோற்று விடுகிறாய். பேசுவது ஆங்கிலமாக இருந்தாலும் அதை நீ மனதுக்குள் யோசிப்பது தமிழில் தான்!