கவியோடை
நம் கல்லூரியின் தமிழ் மன்றமும் கவியோடை ஃபேஸ்புக் குழுவும் இணைந்து நடந்திய கவியோடை நிகழ்வு நேற்று மாலை நம் கல்லூரி வளாகத்தில் இனிதே நடந்தேறியது. நம் கல்லூரியின் முன்னாள் மாணவரும் மற்றும் கவியோடை குழும உறுப்பினராகிய திரு.ப்ரதீப் அவர்களும், நம் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் உறுப்பினர் திரு.நேதாஜி சுபாஷ் அவர்களும் வரவேற்புரை வழங்க, கவியோடை நிகழ்ச்சி இனிதே துவங்கியது. இதில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி பல நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் தங்களுடைய கவிதைகளைப் பார்வையாளர்கள் முன்னே படித்தும், பாடியும் காட்டினர். மாற்றுச் சிந்தனை கவிதைகள், புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள் , வசனக் கவிதைகள், பாடல்கள் , புதுப்பாடல்கள் என்று பல விதமான கவிதைகளைக் கவியோடை கவியரங்கத்தில் நேற்று கேட்க முடிந்தது. இந்நிகழ்விற்கு நேரில் வர இயலாத பல கவியோடை குழும உறுப்பினர்கள் பலன் தங்களுடைய கவிதையை ஒலிப்பதிவு செய்து இந்நிகழ்விற்கு அனுப்பியிருந்தனர். ‘மியாவ்’ என்ற கவிதையில் துவங்கிய கவியோடையின் இறுதிக் கவிதையாய் கவியோடை குழுமத்தின பெண் உறுப்பினர் ஒருவரின் ஒலிப்பதிவுக் கவிதை அமைந்தது. நிகழ்வின் இறுதியில் நோக்கர் கருத்துக் கேட்பின்போது பலரும் இந்நிகழ்வு மிக அருமையாய் இருந்ததாய் பாராட்டினர். குழுப் புகைப்படத்துடன் நிறைவு பெற்ற இந்நிகழ்வை நம் கல்லூரி இறுதியாண்டு மாணவர் த.பாரதிக்கண்ணனும் கவியோடை குழுவின் உறுப்பினர் ரம்யாவும் தொகுத்து வழங்கினர்.