ஒட்டுமொத்த உயிரினத்திற்கும் உயிரளித்து காக்கும் ஓ மரமே!

மரம் வெட்டி காகிதம் செய்து 

மரம் நடுவோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும்

மானுடனின் விந்தை தான் காணாயோ!

மரத்தை வெட்டி செல்போன் டவர் நட்டு

இணையத்தில் இயற்கை காப்போம்

என்ற மனிதனின் விசித்திரம் தான் பாராயோ!

ஓ மரமே! என் சுவாசக் காற்றே

நீ மட்டும் இணையத்தை கொடுத்திருந்தால்

நாங்கள் உன்னை எப்படி தாங்கிப் பிடித்திருப்போம் தெரியுமா?

தாகம் தீர்க்கும் தண்ணீர் இல்லாத வறள் காலத்திலும்

உனக்கு மினரல் வாட்டர் வாங்கி ஊற்றியிருப்போம்

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார்

உன் ஒவ்வொரு இலை உதிர்விலும் இணைய வேகம்

குறைந்து விடுமோ என்று

மனம் பதைபதைத்து வாடியிருப்போம்

அகழ்வாரை தாங்கும் நிலம்போல 

உன்னை வெட்டுபவனுக்கும் சேர்த்தே பிராணவாயு கொடுக்கும்

ஓ மரமே! உன் தியாகத்திற்கும் பெருந்தன்மைக்கும் ஈடேது

ஆறறிவு படைத்த மனிதனின்

சிந்தையில் உதித்த விந்தைகள் கண்டு

மனம் கலங்காத கல் நெஞ்சமோ உனக்கு

உயிர்களின் சுவாசமாய் உணவாய் நிழலாய்

மருந்தாய் மழையாய் வாழும்

தியாகத்தின் உருவமே ஓ மரமே!

உனதருமை தெரிந்தும்

பொருளீட்டும் உலகில், விட்டில் பூச்சியாய் மாட்டிக்கொண்ட மனிதனை மன்னிப்பாயாக

அனைத்து உயிர்களுக்கும் உயிர் கொடுத்தாய் உணவளித்தாய்

ஆயினும் பொருள் மீதுள்ள மோகத்தால்

குரைமுகன் நன்றியில் துளியுமின்றி

சுயநலமே சுயரூயமாய் சுற்றித் திரியும்

மானுடனை மன்னித்தருள்வாய் ஓ மரமே!

உன் மௌனமே மன்னிப்பாய் ஏற்று

தலைவணங்குகிறோம் ஓ மரமே!